மீண்டும் முத்தமிழர் கவனத்திற்கு,
"முத்தமிழில் வசந்தம்!"முத்தமிழ் உறவுகளுக்கு,
வணக்கம்.
தொடர்ந்து நல்கிவரும் தங்களது பேராதரவுடன், முத்தமிழ் தடைகளைத் தாண்டி பீடுநடை போட்டு வருகிறது.
முதற்கண், இதற்காக உங்கள் அனைவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியினைச் சொல்லிக் கொள்கிறோம்.
உங்களது தொடர்ந்த பங்களிப்பு எப்போதும் முத்தமிழுக்கு வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது முத்தமிழில் உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் காணவேண்டும் என்னும் அவாவினால், இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் விதமாய், புதிதாக ஒரு நிகழ்வினைத் தொடங்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.நம்மில் பலரும் பல்வேறு திறன் கொண்டவர்கள்!
எடுத்துக்காட்டாக, கவிதை என எடுத்துக் கொண்டால், மரபுக் கவிஞர்கள், இயல்புக் கவிஞர்கள், புதுக்கவிதை எழுதுபவர்கள் எனப் பல வகையிலும் திறன் பெற்றவர்கள் உண்டு.
அதேபோலத்தான், கதை, கட்டுரை, நகைச்சுவை, அறிவியல் எனப் பல துறைகளிலும் திறமை படைத்தவர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கிட்டும் வகையாக, ஒரு தலைப்பினைச் சொல்லி, அந்த தலைப்பினை ஒட்டி, கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை, ஆன்மீகம் என என்னென்ன வகையில் காட்ட முடியுமோ, அத்தனை வகையிலும் உங்கள் திறமையைக் கொட்டி எங்களுக்கு நல்விருந்து படைக்க அழைக்கிறோம்.
இனி போட்டி விதிமுறைகளைப் பார்ப்போம்!
தலைப்பு: வா! வா! வசந்தமே!
1. அனுமதிக்கப்படும் பிரிவுகள்: குறுங்கதை, சிறுகதை, உருவகக் கதை, நாவல், கட்டுரை, அறிவியல், ஆன்மீகம், நாடகம், நகைச்சுவை, மரபுக் கவிதை, வசன கவிதை, சந்தக் கவிதை, புதுக் கவிதை, வினா-விடை, அரசியல் மற்றும் தமிழிலக்கியம் என மொத்தம் 16!
2. ஒருவரே எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் பிரிவுக்கு ஒன்று மட்டுமே கொடுக்க வேண்டும். இதைக் கவனத்தில் கொள்ளவும்.
3. படைப்புகளை நேரடியாகக் குழுமத்தில் இடாமல், muththamiz@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். குழுமத்தில் நேரடியாக இடப்படும் படைப்புகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.
4. படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி ஏப்ரல் 12, 2009
5. ஏப்ரல் 15 முதல், இந்தப் 16 பிரிவுகளிலும் வந்த படைப்புகள், வகைக்கு ஒன்றாக தினமும் முத்தமிழில் "முத்தமிழில் வசந்தம்" என்னும் தலைப்பில் வெளிவரும். எந்தப் பிரிவு என்பது அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும்!
6. இப்போதுதான் உங்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான வேலை காத்திருக்கிறது!
முடிந்தவரையில், இதற்கு முக்கியத்துவம் கொடுத்து படைப்பு குறித்த உங்கள் கருத்தைப் பின்னூட்டமிட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது பின்னூட்டங்கள் போட்டியின் முடிவுக்கு மிகவும் தேவை!7. எல்லாப் படைப்புகளும் வெளியான பின்பு, அடுத்த ஒரு வாரத்தில் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும்.
8. மிகச் சிறந்த 3 படைப்பாளிகளுக்கு சிறந்த பரிசுகள் காத்திருக்கின்றன.
"கவனிக்க!" 3 படைப்பாளிகளுக்கு பரிசுகள்! பிரிவுக்கு 3 அல்ல!:))9. பரிசு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்!
10. போட்டி பற்றிய நிர்வாகத்தின் முடிவே இறுதியானதும், உறுதியானதும்!!
வாருங்கள்! உங்கள் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, சிறந்த படைப்புகளால் முத்தமிழை அலங்கரியுங்கள் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
ஒவ்வொருவரும் பங்கு பெற வேண்டும் என்பதற்காகவே இத்தனை பிரிவுகள்!!வசந்தகாலத் தென்றல் உங்கள் வாழ்வை வளமாக்கட்டும்!
நன்றி. வணக்கம்!
முத்தமிழ் நிர்வாகம்
**குறிப்பு:மொக்கைகளையும்/பின்னூட்டங்களையும் இந்த இழையில் தவிர்க்கவும் மேலதிக கேள்விகள் இருந்தால் முத்தமிழ் muththamiz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.புரிந்துணர்விற்கு நன்றி