பிரிவெனும் தண்டனை - க.அருணபாரதி
எத்தனை நாள
காத்துக் கிடப்பது?
வருவாய் என்றெண்ணி
வருத்தங்களோடு நெஞ்சில்
கருவாய் அமர்ந்திருக்கும்
அன்பான காதலியே...
எத்தனை நாள
காத்துக் கிடப்பது?
மலர்களின் சத்தத்திலும்
மழலைகள் முத்தத்திலும்
உணராத சந்தோஷம்
உன் பார்வையில்
கண்டேனடி...
அதற்கு தான் இந்த
பிரிவெனும்
தண்டனையா?
நினைவுகள்
குத்திக் கிழித்த
நேரங்களின் தொகுப்பாக
மாறியது வாழ்க்கை..
நீ விட்டுவிட்டு போன
இடங்களில் எல்லாம்
நினைவுகள் வாழ்கின்றன..
நீ திட்டிவிட்டு சென்ற
இடங்களில் எல்லாம்
திகைக்க வைக்கின்றன..
நேற்று நடந்தவற்றை
அசைபோடும் அளவிற்கு
காற்றை போலவே
காலமும் செல்கிறது..
பேச நினைத்தவற்றை
உன்னிடம் பேசாமல்
கோட்டை விட்ட
நிமிடங்கள் இன்று
சாட்டையடி கொடுக்கின்றன
நினைவுகளாக....
நகர்ந்து செல்கிற
நாட்கள் எல்லாமே
நகராத நினைவுகளால்
நரகம் ஆகிறது..
தகர்ந்த கனவுகளின்
கோட்டைச் சுவற்றிலே
திகட்டா உன்முகம் தெரிய
உள்ளம் நோகிறது...
தவறென்ன செய்தேன்
தெரியாமல் மனமும்
துவள்கிறது உடல்
துக்கத்தில் தினமும்..
வாழ்க்கை பாதையில்
ஆயிரம் முட்களாம்..
ஒற்றை ரோஜாநீ
உன்னைக் கடந்திடவே
இத்தனை வலியென்றால்,
முட்களை கடக்கும்வரை
வாழ்வேனா நான்?
வாழ்வேன்..
பூக்களும் முட்களும்
பாதையில் இருந்தாலும்
காலம் என்கிற
காலனி அணிவேன்
நான்..
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அரு ணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------