சற்றே பெரிய சிறுக(வி)தை
நினைவு நீரோடையில்…
கவிதை பொருள் : காதல்
கல்லூரி நூலகம்
காற்றோடு பேசுவதற்கு
கற்றுக்கொடுத்தது
அவளது முதல் சந்திப்பு…
அவள் சிரித்த நிமிடங்கள்
சில வினாடிகள் மட்டும்…
அதைப் பற்றிய சிந்தனைகள்
பல கோடிகள் எட்டும்…
அழகின் இலக்கணம்
அத்துப்படி ஆகும்
அவளை ஒருமுறை
அருகினில் கண்டால்…
இரும்பைக் விசை கொண்டு
இழுக்கும் காந்தத்தை போல
இதயத்தை சுண்டி இழுத்தாள்
கண்களால் என்னை ஆள…
காற்று கூட சொல்லாத
கவிதை ரகசியங்களை என்
காதில் சொன்னது அவள்
கால் கொலுசு !
பூமியிடம் அன்பாய் பேசியவாறு
அரவணைத்து சென்ற அவளது
கால் பாதங்கள் தான்
நான் ரசித்த முதல்
இயற்கை ஓவியம் !
காற்றிடம் ஏதோ மெல்லிய
கவிதை சொல்வது போல
மெதுவாக அசைந்து எங்கும்
மணம் பரப்பியது அவள் துப்பட்டா…
அவளை பூமிக்கு
அனுப்பிவிட்டோமே என
அனுதாபம் தெரிவிக்க
துக்க தினம்
கடைப்பிடித்தது வானம்…
அமாவாசை யன்று !
பூக்களின் மேல் எனக்கு
பூத்தது கோபம்,
அவள் கூந்தல்
என்று அறிந்;தும்
அவை வாடியபோது…
மரப்படுக்கைகளில்
மரத்துப் போய் கிடக்கும்
புத்தகங்களை படிப்பதை விட
மயிலிறகாய் அந்த
புத்தகங்களை வருடும்
உன் மரகத விரலசைவை
உன்னிப்hக கவனிக்கவே
பிடித்தது எனக்கு…!
படிப்பாளி போலவே
நூலகத்தில் நான் சுற்றுவது
படிப்பதற்கு அல்ல என
எனக்கு மட்டுமே தெரியும் !…
அவள் பெயருக்கு பின்
ஆவலாக எனது பெயரையும்
வருகை பதிவேட்டில் வேகமாய்
பதிவதை காண்போருக்கு மட்டும்
எளிதில் இது புரியும் !…
உள்ளத்தில் ஓரமாய் எங்கோ
உறங்கிக் கிடந்த உணர்வுகளை
எட்டி உதைத்து உலுக்கி
எழுப்பியது அவள் முகம்...
கட்டுரை போலவே
சென்று கொண்டிருந்த
வாழக்கை
திடீரென கவிதையானது,
காதல் வந்தது…!
கட்டுரைக்கு முடிவுரை உண்டு
கவிதைக்கு தான் முடிவில்லை!
காற்றை போல உயிரோடு
கலந்து விட்டாள் அவள்……
நேற்று பார்த்தேன் என்றாலும்
இன்றும் காண ஆவல்…
படிக்க வந்த என்னை
துடிக்க வைத்தாய் நீ…
வடித்த கண்ணீர் சொன்னது
அடி நெஞ்சில் தீ…
அவமானங்களும் பிடிக்கும்
அவள் ரசித்து பார்த்தால்…
விஷம்கூட இனிக்கும்
அவள் விரும்பி தந்தால்…
உதாசினம் என்ற பெயரில்
உதறிச் சென்றாய் என்னை !
உன்னால் உள்ளத்தில் உதித்த
கவிதைகளுக்கு நீயே அன்னை !
'வீழ்வேன் என நினைத்தாயோ ?'''
பாரதியின் வைர வரிகள்…
'வாழ்வேன்''என சென்னது
வாழ்த்திய உன் விழிகள்...
விலகி சென்று வாழ
விரும்பியது என் இதயம்…
விரட்டிய உன் பார்வையால்
எங்கும் நினைவுகள் உதயம்…
நினைவுக் கத்தியால் குத்தப்பட்டு
நித்தம் நெஞ்சில் வடிந்திடும்
இரத்தத் துளிகளில் அமர்நது
சத்தமிட்டு சிரிக்கும் பெண்ணே !
சாவும் வரம்;தான் என்பேன்
உன்னோடு சாய்வதென்றால்…
ஏனோ வந்தாய் ?
ஏனோ சென்றாய் ?
'மானோ மயிலோ''
நானோ கவியாய்……
எதற்கு சுற்றுகிறோம்
என்றறியாத புவியாய்……
உன்னால் முளைத்த கவிதைகளை
உன்னிடம் கொடுத்தேன் படிக்க…
உனக்கு ஏனோ எதனாலோ
நேரமில்லை அதை ரசிக்க…
'நல்லா இருக்கிறது'' என்று
எல்லோரையும் போல சொன்னாய்…
உள்ளார்ந்த அதன் உணர்வை
உணராமல் நீயோ சென்றாய்…
படிக்க நேரம் கிடைக்காமல்
பாதி கவிதைகள் படித்தாளாம்…
வெடிக்க விருந்த மனக்குமுறல்
துடிப்பு குறைய அடங்கியது,
'அதையாவது படித்தாளே ! ''
காக்கும் பெற்றோரை மறந்து
காதலி உன்னை நினைந்து
போக்கு மாறிய மனிதனாய்
போதையில் உளறும் கிறுக்கனாய்
மாறினேன் நான் ஏனோ ?
மாற்றியது காதல் தானோ ?
கேள்விக் கணைகளில் உள்ளம்
விழியில்; கண்ணீர் வெள்ளம்
ஊசியைக் கண்ணில் குத்தி
உதட்டில் சிரிப்பை வைத்தேன்
உன்னை எண்ணி...
என்னை மறந்து……
பார்த்த பார்வைகள் எல்லாம்
பாசத்தடன் என்று நினைத்தேன்
பாவை உன்னை எண்ணி
பகலிலும் கனவில் திளைத்தேன்…
தீர்வை எண்ணி நாளும்
சிரித்து உடல் இளைத்தேன்
வியர்வை கண்ணில் வடித்தும்
கவிதை இயற்றி பிழைத்தேன்…
நேற்று பார்த்தது போலவே
நெஞ்சில் உனது முகம் !
காற்றில் உன்சுவாசம் இருப்பதால்
சுவாசிக்க கூடவொரு சுகம்…
போற்றி புகழ்ந்து உன்னை
என்ன செய்ய போகிறேன் ?
தூற்றாமல் மட்டும் இரு
துணிவுடன் நான் சாகிறேன்…
வாட்டி என்னை வதைக்கும்
வயதுவந்த வாடா மலரே !
ஏட்டில் வளரும் காதல்
என்போல் ஓரு சிலரே !
பாட்டுக் கவிஞனாய் என்னை
மாற்றி யமைத்த மணியே !
நோட்டில் உன்னை எழுதி
நோகி அழுதேன் தனியே !
நாட்டைப் பற்றியே பேசி
நான் திரிவது கண்டு
வீட்டை நினைக்க சொல்வாய்
விளக்கம் புரிந்தது இன்று !
நான் மட்டும் தனியே
என் வீட்டில்……
கல்லூரி முடிந்தது
கடைசி நாளில் உன்னை
கண்கள் கசிந்திட பார்த்தேன்
உடைக்கப் பட்ட மனதில்
உன்னை எண்ணி நீர்த்தேன்..
சென்று வரேன்' என்று
செல்லமாக நீ சிரித்தாய்
என்று வருவாய் ?'என்று
சொல்லாமல் ஏன் மறைந்தாய் ?
ஏக்கத்தில் அழுத மனம்
இடம் மாறியே போனது
தூக்கத்திலும் உன் பிரிவு
துக்கத்தை தினம் தந்தது…
தாக்கத்தை ஏற்படுத்தி நீயோ
தவிக்க விட்டு சென்றாய்
தேக்கத்தில் தேம்பி அழுதேன்
தேவதை வந்து நின்றாய்,
இரவு நேரத்தில்;
இரவல் வாங்கிய
நிமிடங்களில்
கனவாக கனவிலே…
பிரிவு வந்த நாளில்
பிழை யேதும் இல்லை
முடிவு இல்லாக் காதல்
முறிந்த பின்னும் தொல்லை…
செல்லுமிட மெல்லாம் எங்கும்
கொல்லும் உந்தன் புன்சிரிப்பு
துள்ளும் அந்த நினைவுகளால்
உள்ளம் எங்கும் பூரிப்பு !
முற்றுப்புள்ளி வைத்திடவே
முடிந்தேன் என்றாலும்
முடியவில்லை என்னால்…
முற்றுப்புள்ளி யெல்லாம்
முடிவுரை அல்ல
புரிந்துகொண்டேன் பின்னால்…
உண்மை தான்…
முற்றுப்புள்ளி யெல்லாம்
முடிவுரை அல்ல
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே .
'காதல் ''
வலிகளின் ராணி
வாழ்வின் ஏணி…
தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************